(UDHAYAM, COLOMBO) – அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஏற்றிச்செல்லபட்டமையே களுத்துறை – கட்டுக்குறுந்த படகு விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
தென்மாகாண காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது இந்த படகில் 41 பேர் பயணித்துள்ளனர்.
இதனிடையே, கட்டுக்குறுந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி தமது கவலையை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறை, கட்டுகுருந்த படகு விபத்தில் இதுவரையில் சிறுவர் ஒருவர் உட்பட்ட 11 பேர் உயிரிழந்தனர்.
இதன்போது காணாமல்போன 29 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 26 பேர் பேருவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் களுத்துறை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஒருவர் தொடர்ந்தும் காணாமல் போன நிலையில் உள்ளதாகவும் இன்றைய தினம் மீண்டும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 11 மீட்புப் பணியாளர்களும், 20 கடற்படையினரும் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை, பத்து படகுகளும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அத்துடன் உலங்கு வானுர்தி ஒன்றின் மூலமாக கண்காணிப்பு உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுவருவதாக வான்படையினர் தெரிவித்துள்ளனர்.
பேருவளை சென் லாசரஸ் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் ஒன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், குறித்த தேவஸ்தானத்தை நோக்கி பயணித்த படகு ஊர்வலத்தின் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.