(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னாவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணையை ஆதரித்து நேற்று உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார்.
கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்திற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொள்வது தொடர்பில் மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் பிரதம உள்ளக கணக்காய்வளரிடம் விபரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
குறித்த விபரங்கள் கிடைக்கப்பெற்ற உடனேயே அவற்றை நிரப்புவதற்கான முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்னார்.
தற்போது பட்டதாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நியமனங்களுக்காக காத்திருப்பதுடன் அவர்களுள் பலர் தமது உரிய வயதைக்கடந்தும் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திற்கு பட்டதாரிகளை இணைத்து கொள்ளும் வயதெல்லையை இம்முறை ஆசிரியர் நியமனத்தின் போது பட்டதாரிகளின் கோரிக்கைக்கு அமைய 40ஆக மாற்றியுள்ளதாகவும் வயதெல்லையை 45ஆக மாற்றுவதற்கான முழுமையான முயற்சிகளை முன்னெடுத்துவருவதாகவும் கிழக்கு முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
பட்டதாரிகளின் வேதனைகளை நன்கு அறிந்தவன் என்ற வகையில் தமது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் அவர்களுக்கு தம்மால் இயன்றவை அனைத்தையும் செய்வதற்கு தாமும் அமைச்சரவை வாரியமும் முழு முயற்சிகளை எடுத்துவருவதாக கிழக்குமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமனங்கள் மற்றும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் புதிய ஆளணிகளை உருவாக்குவதற்குமான முழுமையாக அதிகாரங்கள் தம்மிடம் வழங்கப்படுமாயின் அதற்குரிய செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க தாம் காத்திருப்பதாகவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தமது பதவிக்காலத்திற்குள் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு முழுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் அதற்கு எந்த எல்லையை வேண்டுமானலும் தொடுவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவே நியமனங்கள் தொடர்பான அநேக தீர்மானங்களை எடுப்பதுடன் அது தொடர்பான பல அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சினைக் காணப்படுவதுடன் அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை முன்னெடுத்து வருவதுடன் தற்போது நீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் நீர்வழங்கல் அமைச்சர் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கமினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்குமாகாண முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.